அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ஜவுளித் துறை முதலீடுகள் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்


அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ஜவுளித் துறை முதலீடுகள் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"செமி கண்டக்டர் தயாரிப்பில் சீனா மற்றும் தைவான் நாடுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு ஊக்குவித்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் ஒசூரில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், திமுக அரசு இதில் முணைப்பு காட்டாததன் காரணமாக செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் அசாம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் கையை விட்டு வெளிநாட்டு முதலீடுகள்தான் வெளி மாநிலங்களுக்குச் செல்கிறது என்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மத்தியப் பிரதேச முதல்-மந்திரி, கோவை மற்றும் திருப்பூருக்கு நேரடியாக வருகை தந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதனால், உள் மாநில ஜவுளி முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஜவுளி கூட்டமைப்பு தனது விரிவாக்கப் பணிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதற்கு ஒருசில முக்கியக் காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதன் விபரம்:

• விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு மூன்று முறை கடுமையாக மின் கட்டணங்களை உயர்த்தியதுடன், பீக் ஹவர் கட்டண உயர்வு, நிலை கட்டணம் உயர்வு.

• 365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த போதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது.

வெளிநாடுகளில் இருந்து முதலீட்டினை ஈர்க்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற விளம்பர தி.மு.க. அரசு, இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, முதலில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்குவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் 'கோயம்புத்தூர்' என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story