ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது


ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது
x

கடலில் மீன்பிடிக்க வந்த சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரைதட்டிய நிலையில் காணப்படுகிறது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள அதனை உடைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் மீன் பிடிக்க 6 மீனவர்களுடன் சென்று சென்னைக்கு அருகில் கிழக்கு கடலோர பகுதியில் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத விசைப்படகின் அடியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து விசைப்படகு கடலில் தள்ளாடியது.

இதை சற்றும் எதிர்பார்க்காத மீனவர்கள் அதனை கரைக்கு திருப்ப முயன்றனர்.

அதில் பயணம் செய்த 6 மீனவர்களும் செல்போன் மூலம் சதுரங்கப்பட்டினம் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு அந்த பகுதி மீனவர்கள் படகில் சென்று விசைப்படகில் தத்தளித்த அவர்களை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பிறகு அந்த படகு தானாகவே கரையில் வந்து ஒதுங்கியது.

இனி மீன்பிடிக்கும் தொழிலுக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு படகில் அடிப்பகுதி, பக்க வாட்டு பகுதிகளில் ஓட்டை விழுந்து சேதமடைந்துவிட்டதால் அதனை உடைத்து எடுக்க விசைப்படகு உரிமையாளர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கிரேன் உதவியுடன் படகு கரைக்கு கொண்டு வரப்பட்டு முழுவதும் உடைத்து அப்புறப்படுத்தப்பட உள்ளது.

சேதமடைந்த ராட்சத விசைப்படகின் மதிப்பு ரூ.30 லட்சம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் விசைபடகில் வந்தவர்கள் சென்னை சென்றுவிட்ட நிலையில் தரைதட்டி நிற்கும் விசைப்படகில் சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அதில் ஏறி விளையாடுவதும், அதன் மீது ஏறி கடலில் குதிப்பது, படகில் முனை பகுதியில் நின்று செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை காண முடிந்தது.


Next Story