நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்


நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்
x

ராஜபாளையத்தில் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

நாகரிக உலகில் மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவது குறைந்து வாழும் சமுதாயமாக நம் மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது. மனித நேயம் ெகாஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது என்பது நேற்று நடந்த இந்த சம்பவமே சாட்சி. இதுகுறித்த விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் ஜோதி பாஸ்கர் (வயது 50). இவர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் காலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனியார் பஸ் மூலம் வேலைக்கு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.


பஸ்சில் ஏறியதில் இருந்து மிகவும் சோர்வான காணப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வலியால் துடித்தார். இதைப் பார்த்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து பஸ் டிரைவரிடம் கூறினர். இதையடுத்து சங்கரன்கோவில் முக்கு பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள டீக்கடை முன்பு பஸ்சை நிறுத்தினர். பின்னர் ஜோதி பாஸ்கரை டிரைவரும், கண்டக்டரும் அங்கேயே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே டீக்கடை முன்பு ஒருவர் படுத்து கிடப்பதை பார்த்து டீக்கடைக்கு வந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் ெகாடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோதி பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்றார் பாரதியார். மண்ணில் மலர்ந்த அனைத்து உயிர்களுக்கும் அன்பு காட்ட வேண்டும் என்றார்.

ஆனால் நெஞ்சு வலியால் துடித்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முன்வராமல் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதனால் உதவிக்கு ஆளின்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் விட்டு சென்றதால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோய் விட்டது.

1 More update

Next Story