செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் நாளை தொடக்கம்


செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் நாளை தொடக்கம்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரமாண்டமான அரங்கில் இன்று முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்தாலும் அதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். போட்டிகள் கிடையாது. மறுநாளில் இருந்து ஆட்டங்கள் நடைபெறும். இதன்படி முதல் சுற்று ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டம் இரவு 9 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி ஒரு சுற்று ஆட்டம் நடைபெறும். போட்டியில் ஆகஸ்டு 4-ந் தேதி ஓய்வு நாளாகும். 11-வது மற்றும் இறுதி சுற்று ஆகஸ்டு 9-ந் தேதி நடக்கிறது. பரிசளிப்பு மற்றும் வழியனுப்பு விழா அடுத்த நாள் 10-ந் தேதி நடக்கிறது.

முதல் சுற்று ஆட்டத்தில் எந்த அணி, எந்த அணியுடன் மோத வேண்டும் என்பதை நாளை காலை நடைபெறும் அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதன் பிறகு அந்த அட்டவணை விவரம் இணையத்தில் வெளியிடப்படும்.


Next Story