கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு


கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு
x

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

உத்திரமேரூர் பேரூராட்சி பட்டஞ்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கனிஷ்கா (10) என்ற மகளும் ஹரித் (7) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் தனது வயலில் உள்ள கிணற்றின் அருகே துணி துவைப்பதற்காக மணிகண்டன், மனைவி, மகன், மகளுடன் சென்றார். துணி துவைத்து முடித்த உடன் வீட்டுக்கு கிளம்பலாம் என்று நினைத்தபோது மகள் சைக்கிளில் வீட்டுக்கு வருவேன் என்று கூறியதால் மனைவி மற்றும் மகனுடன் மணிகண்டன் வீட்டுக்கு திரும்பினார். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னரும் மகள் வராததை பார்த்த மணிகண்டன் மீண்டும் வயலுக்கு சென்று மகளை தேடி பார்த்தபோது அவர் கிணற்றில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கிணற்றில் இறங்கி அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமி கிணற்றின் அருகே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Next Story