பொதட்டூர்பேட்டை அருகே சமத்துவபுரம் வீடுகளை பார்வையிட வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்


பொதட்டூர்பேட்டை அருகே சமத்துவபுரம் வீடுகளை பார்வையிட வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

பொதட்டூர்பேட்டை அருகே சமத்துவபுரம் வீடுகளை பார்வையிட வந்த அதிகாரி காரை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே ராமசமுத்திரம் ஊராட்சியில் சமத்துவபுரம் வீடுகள் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு வீடுகள் அனைத்தும் பழுதடைந்து காணப்பட்டன. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு இந்த சமத்துவபுர வீடுகளை செப்பனிட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வீடுகள் செப்பனிடப்பட்டு பயணிகள் தேர்வும் நடைபெற்றது.

இதில் சமத்துவபுர வீடுகளுக்கான பயணிகள் தேர்வுக்கு ரூ.30,000 ஒன்றிய செயலர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் கேட்டு பெற்றதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சமத்துவபுரம் திறப்பு விழா பல முறை ஒத்தி போடப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்மத்துவபுர வீடுகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் இன்று (புதன்கிழமை) திறந்து வைப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகளை பார்வையிட திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரிஷப் நேற்று வந்தார். வீடுகளை பார்வையிட்ட பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட தயாரான போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அவரது காரை வழிமறித்து சமத்துவபுர வீடுகளைப் பெற ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவரும் லஞ்சம் கேட்டதாகவும் தங்களால் கொடுக்க இயலாத நிலையில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் தங்களுக்கும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என அவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story