2 கார்களுக்கு தீ வைத்து எரித்த வாலிபர் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் விபரீதம்


2 கார்களுக்கு தீ வைத்து எரித்த வாலிபர் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் விபரீதம்
x

பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் 2 கார்களுக்கு தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர், துரைராஜ் தெருவில் நிறுத்தி இருந்த ஸ்ரீகாந்த் மற்றும் கோகுல் ஆகியோரது கார்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த், கோகுல் மற்றும் அக்கம் பக்கத்தினர் வளசரவாக்கம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராமாபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 கார்களில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் கார்கள் தீயில் எரிந்து நாசமாயின. வளசரவாக்கம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபர் ஒருவர், பாட்டிலில் எடுத்து வந்த மண்எண்ணெய்யை 2 கார்களின் மீதும் ஊற்றி தீ வைத்து எரிப்பது பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வரும் விக்னேஷ் (வயது 22) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், 'டிக்-டாக் ', 'யூடியூபர்கள்' போன்று பொதுமக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் 2 கார்களையும் தீ வைத்து எரித்ததாக கூறினார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் கார்களை தீ வைத்து எரித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story