கன்னியாகுமரி: மாமியாரின் நகையை பறித்து கொண்டு ஓடிய பெண்ணை விரட்டி பிடித்த மருமகள்


கன்னியாகுமரி: மாமியாரின் நகையை பறித்து கொண்டு ஓடிய பெண்ணை விரட்டி பிடித்த மருமகள்
x

மார்த்தாண்டத்தில் ஆஸ்பத்திரிக்கு பஸ்ஸில் சென்ற மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை மூதாட்டியின் மருமகள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி:

கொல்லங்கோடு அருகே குருசடி விளாகத்தை சேர்ந்தவர் கிப்சன்(35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி மேரி ஷைனி (32). கிப்சனின் தாய் டெல்பிக்கு(65) உடல் நலம் இல்லாததால் ஸ்கேன் எடுப்பதற்காக வள்ளவிளையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்ஸில் ஏறி புறப்பட்டார். அவருடன் மருமகள் மேரி ஷைனியும் சென்றிருந்தார்.

மாமியார் டெல்பியும் மருமகள் மேரி ஷைனியும் பயணம் செய்த பஸ் குழித்துறையை தாண்டி வெட்டுமணி பஸ் நிறுத்தத்தில் சென்று நின்றது. அப்போது திடீரென்று மூதாட்டி டெல்பியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பஸ்ஸுக்குள் இருந்த ஒரு பெண் பறித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடினார். அதைக் கண்ட பஸ்ஸில் இருந்த சில பயணிகள் திருடி திருடி என கத்தினார்கள்.

உடனடியாக அதை தெரிந்து கொண்ட மேரிஷைனி பஸ்சிலிருந்து இறங்கி தனது மாமியாரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய அந்த பெண்ணை பின் தொடர்ந்து துரத்திச் சென்றாள். ஆனால் அந்தப் பெண் பிடிகொடுக்காமல் ஓடினாள். ஆனால் மேரி ஷைனி அவளை விடாமல் பின் தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து விட்டார்.

தங்கச் சங்கிலி திருடி சென்ற பெண்ணை விரட்டி பிடித்த மேரி ஷைனியை அங்கு நின்ற பொதுமக்கள் பாராட்டினார்கள். பின்னர் பிடிபட்ட அந்தப் பெண் பொதுமக்கள் உதவியுடன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண் பொள்ளாச்சி கொள்ளைக்காபாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பகவதி மனைவி பவானி (39) தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பவானியை கைது செய்தனர். மேலும் பவானியிடம் இருந்து அவர் பறித்த மூதாட்டியின் 2½ பவுன் தங்க சங்கிலியையும் போலீசார் மீட்டனர்.


Next Story