ஆன்லைன் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் திருட்டு - அரியானாவை சேர்ந்த 2 பேர் கைது


ஆன்லைன் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் திருட்டு - அரியானாவை சேர்ந்த 2 பேர் கைது
x

ஆன்லைன் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் திருடிய அரியானாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன் (வயது 62). கடந்த நவம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை என குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட அவர், மறுமுனையில் பேசிய ஆசாமி கேட்ட விவரங்கள் மற்றும் செல்போனில் வந்த ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ஆன்-லைன் வழியாக திருடப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அதேபோல் நங்கநல்லூர் 38-வது தெருவை சேர்ந்தவர் ஹரிஷ். இவருடைய மனைவி பத்மா. கடந்த அக்டோபர் மாதம் இவரிடம் செல்போனில் பேசிய மர்ம ஆசாமி, 'பான் கார்டு' அப்டேட் செய்வதாக கூறி செல்போனில் வந்த ஓ.டி.பி. எண்ணை பெற்றுக்கொண்டார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் 'ஆன்-லைன்' வழியாக எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதில் குற்றச்செயலில் ஈடுபட்டது அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித்சிங் (49), நாராயணசிங் (44) ஆகியோர் என தெரியவந்தது. தனிப்படை போலீசார் அரியானா சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story