திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் போராட்டம்
திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருத்தணியில் உள்ள முருகன் கோவில் மற்றும் அதன் 29 உப கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2016-ல் கொண்டுவரப்பட்ட 7-வது ஊதிய உயர்வை அமல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி 50-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர்கள் திருத்தணி மலைக்கோவில் நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக கோவில் துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று துணை ஆணையர் விஜயாவிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் கோவில் நிர்வாகம் ஊழியர்களுக்கு வரவேண்டிய 7-வது ஊதிய உயர்வு அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரித வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், ஒரு சில மாதங்களில் பணிகள் முடிவடைந்து ஊழியர்களுக்கு ஊதி உயர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கோவில் ஊழியர்களின் இந்த திடீர் பேரணியால் முருகன் கோவில் துணை ஆணையர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.