'மல்யுத்த வீராங்கனைகள் கைது' செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


மல்யுத்த வீராங்கனைகள் கைது செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 28 May 2023 6:48 PM IST (Updated: 28 May 2023 6:49 PM IST)
t-max-icont-min-icon

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர்.

ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?' என தெரிவித்துள்ளார்.



Next Story