திருச்சி: லாரி மீது ஆம்னி பஸ் மோதி கோர விபத்து - 2 பேர் பலி
சென்னையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் திருச்சி அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி,
சென்னையில் இருந்து நேற்று இரவு தேனி மாவட்டம் கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 34 பேர் பயணித்தனர்.
பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச்சென்ற லாரி மீது ஆம்னி பஸ் அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சந்திரன், பழனியம்மாள் என்ற பயணி என மொத்தம் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிக பாரம் காரணமாக லாரி மெதுவாக சென்றபோது அதிவேகமாக வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.