பெரம்பலூர் அருகே ஆதார், ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்


பெரம்பலூர் அருகே ஆதார், ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்
x

பெரம்பலூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

பணி நீக்கம்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருமாந்துறையில் திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சுமார் 130 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 28 ஊழியர்களை பணியில் இருந்து தனியார் நிறுவனம் திடீரென்று நீக்கியது. பணி நீக்கியகாரணத்தை வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நகல்கள் எரிப்பு

இதனை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேரையும் நிபந்தனை இன்றி மீண்டும் பணியில் சேர்க்கக்கோரியும், சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் 36-வது நாளான நேற்று சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்தினர். போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. கிளைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

கலெக்டரிடம் ஒப்படைக்க...

இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில செயலாளர் விஜயகுமார், நிருபர்களிடம் கூறுகையில், திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான பணிநீக்க செயலை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் நிறுத்தி வைத்து, ஏற்கனவே சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாளை (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு படை திரண்டு வந்து எங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம், என்றார்.


Next Story