குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: அண்ணாமலை இரங்கல்


குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: அண்ணாமலை இரங்கல்
x
தினத்தந்தி 30 Sep 2023 6:09 PM GMT (Updated: 30 Sep 2023 6:13 PM GMT)

குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்த நிலையில், பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜனதா சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.



Next Story