கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி


கொடுங்கையூரில் சோகம்: குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை - தாய்ப்பால் கொடுக்க முடியாததால் விரக்தி
x

குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விரக்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

சென்னை

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவருடைய மனைவி அஸ்வத் பிவி. இவர்களுடைய மகள் ஆஷா (வயது 24). பி.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புழல் சக்திவேல் நகரைச் சேர்ந்த அமீன் பாஷா என்பவருடன் திருமணம் ஆனது. இவர், அம்பத்தூரில் கார் பாலிஷ் போடும் வேலை செய்து வருகிறார்.

ஆஷா கர்ப்பமானார். கடந்த செப்டம்பர் மாதம் நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கொடுங்கையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கினார். 40 நாட்களுக்கு முன்பு ஆஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆஷா, தனது குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்தார்.

ஆஷாவுக்கு தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரால் பிறந்த தன் குழந்தைக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ஆஷா, வீட்டின் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஆஷாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


Next Story
  • chat