திருச்சி: தனியார் பஸ் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் பலி - 20 பேர் படுகாயம்
விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூருக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை சேலம் மாவட்டம் ஓலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் துறையூர் சத்தியநாராயண சிட்டி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் மதுபோதையில் தாறுமாறாக வந்ததாக தெரிகிறது. இதனால் பஸ் டிரைவர் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர மரத்தில் மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. டிரைவர் வரதராஜன் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். இந்த விபத்தை கண்டவர்கள் துறையூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி டிரைவர் வரதராஜனை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மேலும் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் துறையூர், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.