திருச்சி அரசு ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் 8 பேர் கைது
திருச்சி அரசு ஐ.டி.ஐ. மாணவர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதத்தில் கொலை செய்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
ஐ.டி.ஐ. மாணவர் கொலை
திருச்சி முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னன். இவருடைய மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி அரசு ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் அண்ணன் ஆகாஷ் மற்றும் பாட்டி தங்கம்மாள் ஆகியோருடன் இரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் இல்லாததால் கதவை திறந்து வைத்து தூங்கினார்கள்.
அப்போது கோகுலின் வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமிகள் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் கோகுல் பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொடியாலம் காந்திநகர் மேலத்தெருவை சேர்ந்த மருதராஜா என்பவர் மகன் தேசிங்கு ராஜா (27), கந்தசாமி மகன் கமல்ராஜ் (21), கணபதி மகன் மதிர் விஷ்ணு (18), ராமசந்திரன் மகன் மகேஸ் வர்மா (22), சதாசிவம் மகன் முத்து (22), செல்வராஜ் மகன் நித்தியானந்தம் (29), விஜய் மகன் ஜெய் ஆகாஷ் (22), சந்திரன் மகன் ரஞ்சித் (22) ஆகியோர் சேர்ந்து கோகுலை கொலை செய்தது தெரியவந்தது.
8 பேர் கைது
இந்த கொலை சம்பவம் குறித்து தேசிங்கு ராஜா போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியதாவது:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோகுலுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல் எனது தொடையில் அரிவாளால் வெட்டினார். இதையடுத்து நான் சிகிச்சை பெற்று கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி கிராமத்தில் தங்கி இருந்தேன். இந்த சம்பவம் குறித்து விஜயபுரம் போலீசார் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் ெவளியே வந்தார்.
இந்தநிலையில் கோகுல், என்னை தேடி வளையப்பட்டி பகுதிக்கே வந்துவிட்டார். எனவே எனது நண்பர்களுடன் சேர்ந்து கோகுலை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி நாங்கள் கோகுல் வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து தேசிங்கு ராஜா உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.