திருத்தணி அருகே பஸ் மீது லாரி மோதல் - 2 பேர் படுகாயம்


திருத்தணி அருகே பஸ் மீது லாரி மோதல் - 2 பேர் படுகாயம்
x
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண் 97 என்ற பஸ், திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூர் வரை இயக்கப்படுகிறது. வழக்கம் போல் நேற்று காலை 8:20 மணிக்கு சுமார் 80 பயணிகளுடன் திருத்தணி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து இந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கண்டக்டராக ஏழுமலை, ஓட்டுனராக ராஜா ஆகியோர் பணியில் இருந்தனர். இ்ந்த பஸ் காலை 9 மணியளவில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமாபுரம் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி பஸ் மீது பயங்கராமாக மோதியது. இதில் பஸ்சின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்தில் பஸ்சில் பின்னால் அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பஸ்சில் இருந்து மற்ற பயணிகள் மாற்று பஸ்சில் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story