எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை- டி.டி.வி.தினகரன்


எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை- டி.டி.வி.தினகரன்
x

அ.தி.மு.க. செயல்படாத கட்சியாக உள்ளது, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி இல்லை

தஞ்சையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 'தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்' என்றுதான் சொன்னேன். உடனே எடப்பாடி பழனிசாமியுடன் நான் இணைய போகிறேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். அ.ம.மு.க. ஒரு சுதந்திரமான கட்சி. நாங்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு தான் செல்லமுடியும்.

எனவே அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் நான் இணைய வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. இன்றைக்கு ஒரு செயல்படாத கட்சியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். நாளைக்கே ஒரு இடைத்தேர்தல் வருகிறது என்றால், படிவம் ஏ மற்றும் பி-யை அ.தி.மு.க.வுக்காக யார் கொடுக்க முடியும்?.

மக்களை ஏமாற்ற முடியாது

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இரு வாய்ப்பு மட்டுமே உண்டு. ஒன்று பா.ஜ.க. மற்றொன்று காங்கிரஸ். இந்த 2 கட்சிகளுடன்தான் நாங்கள் கூட்டணி போக முடியும். முடியாத பட்சத்தில் நாங்கள் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம்.

அ.தி.மு.க.வில் இனி சின்னத்தை காட்டி கூட மக்களை ஏமாற்ற முடியாது. ஏனெனில் பல ஆயிரம் கோடி செலவு செய்தும் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை. இந்த விரக்தியில்தான் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ பேசுகிறார். அவரது தலைமையில் கூட்டணி வரும் என்பதை நான் நம்பவில்லை.

இரட்டை இலை சின்னம் மட்டும் கிடைக்காமல் போய்விட்டால் எடப்பாடி பழனிசாமியின் நிலைமை என்ன ஆகும்?.

கொள்கையில் மாற்றம் இல்லை

தி.மு.க. மாநிலத்தில் ஆட்சி நடத்தினாலும் மத்தியில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு பயந்து கொண்டு தான் இருக்கிறது. பா.ஜ.க.வை திருப்திப்படுத்த அவர்கள் காங்கிரஸ் கட்சியை கூட கூட்டணியில் இருந்து கழற்றிவிடுவார்கள்.

தி.மு.க.வை எதிர்த்து போராடும் எங்கள் கொள்கையிலும், துரோகிகளிடம் இருந்து எங்கள் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கொள்கையிலும் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அ.ம.மு.க. கொண்டு வரும். அதுவே எங்கள் கொள்கை.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பேன்

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, அவர் ஒரு கட்டத்தில் பாதை மாறி சென்று தவறாக நடந்து கொண்டார். இப்போது எங்களுடன் இணைந்து போக வேண்டும் என்று பேசி வருகிறார். இதில் இருந்தே அவர் திருந்திவிட்டார் என்பது தெரிகிறது.

தவறை உணர்ந்த பின்னர் அவருக்கு நேசக்கரம் நீட்டுவதில் ஒன்றும் தவறு இல்லையே... வாய்ப்பு கிடைக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் சந்தித்து பேசுவேன். இதேபோல எடப்பாடி பழனிசாமியும் திருந்தி வந்தால் அது தவறு கிடையாது. திருந்தி வருவோரை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story