சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய உகாண்டா நாட்டு பெண் - குற்றபின்னணி உடையவரா? என விசாரணை
குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்கு உள்ளாகாமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய உகாண்டா நாட்டு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த 20-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து முத்திரை குத்திய வெளியே அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்த விமானத்தில் வந்த 186 பயணிகளின் ஆவணங்களையும் சோதனைக்குள்ளாகி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமானத்தில் வந்த அனைத்து பயணிகளுக்கும் நடத்தப்பட்ட குடியுரிமை சோதனையை சரிபார்த்தபோது, ஒரு வெளிநாட்டு பயணிக்கு சோதனை நடக்காததை கண்டறிந்தனர்.
உடனே ஆவணங்களை ஆய்வு செய்தபோது உகாண்டா நாட்டை சேர்ந்த ஒரு பெண் பயணியின் பாஸ்போர்ட், குடியுரிமை அலுவலரின் மேஜையில் கேட்பாரற்று கிடந்தது. உடனடியாக அந்த பாஸ்போர்ட்டை எடுத்து ஆய்வு செய்தனர். உகாண்டாவில் இருந்து சார்ஜா வழியாக சென்னைக்கு 3 பெண்கள் கொண்ட 7 பேர் வந்திருந்தனர். இவர்கள் சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உகாண்டாவில் இருந்து வந்த மற்ற 6 பயணிகள் குடியுரிமை சோதனை முடித்து விட்டு வெளியில் சென்று விட்டனர். ஒரு பெண் மட்டும் சோதனை செய்யாமல் தப்பியது தெரியவந்தது. பின்னர் குடியுரிமை அதிகாரிகள் உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்று டெல்லி செல்ல இருந்த 6 உகாண்டா பயணிகளை பிடித்து விசாரித்தனா்.
கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு பின் 6 பேரை விடுவித்த குடியுரிமை அதிகாரிகள் மாயமான பெண் குறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தனா். விமான நிலைய போலீசாா் மோசடி, ஏமாற்றுதல், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டவர் குடியுரிமை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்போது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க விருப்பதையொட்டி, சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் சோதனைக்கு உள்ளாகாமல், உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பயணி தப்பி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் தப்பி ஓடினார்? போதைபொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவரா? அல்லது சா்வதேச போலீசாரால் தேடப்படும் குற்ற பின்னணி உடையவரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.