'யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துள்ளது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வுகள் பிரிவில் குடிமைப்பணிகள் முதல்நிலைத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது ஆயிரம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

"தேசிய கல்வி நிறுவனத்தின் தர நிர்ணய பட்டியலில், முதலில் உள்ள 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஆனால் இத்தனை வசதிகள் இருந்தும் மத்திய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று செல்வது மிகவும் குறைந்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

முன்னதாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் 10 சதவீதமாக இருந்த தமிழர்களின் தேர்ச்சி விகிதம், 2016-ம் ஆண்டுக்குப் பிறகு 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஒன்றியத்திலும், மாநிலத்திலும் அரசு உயர்பதவிகளில் தமிழர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் 'நான் முதல்வன்' திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது."

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.



Next Story