கள்ளக்குறிச்சி விவகாரம்; விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி 13-ந்தேதி வி.சி.க. ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் பேட்டி
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் திட்டமிட்டு திசை திருப்பப்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 17-ந்தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் திட்டமிட்டு திசை திருப்பப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மாணவியின் மரணம் குறித்து விசாரிக்காமல், பள்ளியில் நடந்த வன்முறைக்கு சிறிதும் தொடர்பில்லாதவர்களை சிறப்பு புலனாய்வுக் குழு வேட்டையாடி வருவது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
மேலும் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சாதி பெயரைக் கேட்டு புலனாய்வுக் குழு சிறைப்பிடித்து வருவதாக குறிப்பிட்ட அவர், மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி வரும் 13-ந்தேதி வி.சி.க. சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.