வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்


வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 12 Feb 2024 2:41 PM GMT (Updated: 13 Feb 2024 6:52 AM GMT)

விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மீட்கப்பட்டது.

சென்னை,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி சட்லஜ் நதிக்கரையில் விழுந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை கடந்த 8 நாட்களாகத் தேடிவந்த நிலையில், இன்று அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர பற்றாளரும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விசுவாசமிக்கத் தொண்டரும், கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டவரும், தனது வாழ்நாளில், தன்னாள் இயன்ற உதவிகள் அனைத்தையும் ஏழை, எளியோருக்கு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வருபவரும், தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருபவருமான அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்கள், தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒரே மகனை இழந்தது. அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மகனை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி அவர்களுடைய துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.

பெற்ற மகனை இழந்து வாடும் அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்க, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story