துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: கவர்னர் நற்சான்றிதழ் வழங்கி விட்டு இப்போது குற்றம்சாட்டுவது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ்


துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: கவர்னர் நற்சான்றிதழ் வழங்கி விட்டு இப்போது குற்றம்சாட்டுவது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ்
x

பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்தபோது தான் துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டது. அப்போது நற்சான்றிதழ் வழங்கி விட்டு இப்போது குற்றம்சாட்டுவது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகாரங்களை குவிக்க முயற்சி

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில அரசுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர பார்க்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகாரங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தான் தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது. மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகம் வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. ஆனால் அதை மீறுவது கண்டனத்துக்குரியது. பா.ஜனதா ஆளுகின்ற மாநிலங்களிலேயே இந்தி திணிப்பையும், அதிகார குவியலையும் எதிர்த்து பலர் பேசி வருகிறார்கள்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தி பேசி வருகிறார். தமிழகத்தில் பா.ஜனதா தலை நீட்டி வருவதாக அவர் கூறுகிறார். ஆனால் இங்கு எதுவும் எடுபடாது.

ஆன்மிகம் அல்ல

அதிலும் அவர்கள் பேசுவது ஆன்மிகம் அல்ல. ஆன்மிகம் என்பது அன்பை உள்ளடக்கியது. அறத்தை முன்வைக்க கூடியது. அவர்கள் அன்பு, அறத்துக்கு நேர் எதிராக வெறுப்பை பேசி வருகிறார்கள். கவர்னர் பதவி மாநிலங்களுக்கு உதவியாக இருந்ததாக வரலாறு குறைவு. மாறாக தலைவலியாக தான் இருந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்கப்பட்டதாக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். ஆனால் அவர் அதை தாமதமாக கண்டுபிடித்துள்ளார். அவர் கவர்னராக இருந்தபோது அவர் தலைமையில் தான் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டன. அப்போது நற்சான்றிதழை அவரே வழங்கினார். ஏன் அப்போது அதை பேசி தடுக்கவில்லை?. இப்போது குற்றம்சாட்டுவது ஏன்?.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story