மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987 கன அடியாக அதிகரிப்பு..!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்,
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. இன்று கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 2,873 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது.
நேற்று இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,217 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 3,930 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் கபினி அணைக்கு இன்று 4,309 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 74.25 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று 1,100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 7,317 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று வினாடிக்கு 5,030 கன அடி நீரே திறக்கப்பட்டு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலையில் 3,021 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் வினாடிக்கு 4,987 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 47.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 46.81 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 46.57 அடியாக குறைந்தது.