சென்னையில் இருந்து மியான்மருக்கு வாராந்திர விமான சேவை - முதல் விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு
சென்னையில் இருந்து மியான்மருக்கு வாராந்திர விமான சேவை தொடங்கியது. சென்னை வந்த முதல் விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மியான்மர் நாட்டில் இருந்து டெல்லி, கொல்கத்தா, பீகார் இடையே விமான சேவை உள்ளது. ஆனால் பழைய பர்மா நாடான மியான்மரில் அதிகமான தமிழர்கள் வசிப்பதால் சென்னைக்கும் விமான சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில் மியான்மர் நாட்டு விமான சேவை சென்னைக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 11.15 மணிக்கு சென்னை வந்து, மீண்டும் மியான்மருக்கு மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மியான்மரில் இருந்து 48 பயணிகளுடன் முதல் விமானம் சென்னை வந்தது. முதல் முறையாக சென்னை வந்த மியான்மர் விமானத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் விமானத்தின் 2 பக்கமும் தீயணைப்பு வாகனங்கள் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றது. அந்த விமானத்தில் வந்த 48 பயணிகளுக்கும் விமான நிலைய அதிகாரிகள் பூ கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அதே விமானம் மாலை 3.15 மணிக்கு 70 பயணிகளுடன் மியான்மருக்கு புறப்பட்டு சென்றது.