தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? அண்ணா கூறிய நினைவுகளை சொல்லி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? என்று பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
தி.மு.க. இளைஞர் அணி செயலி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலி, முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை-2 ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் அமைச்சர் க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை-2, தி.மு.க. இளைஞர் அணி செயலியை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:-
கண்காணித்து வருகிறேன்
நான் பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன். பிறந்த வீட்டுக்கு மட்டுமல்ல, வளர்த்த வீட்டுக்கு வந்துள்ளேன். வளர்த்த வீட்டுக்கு மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருக்கின்ற வீட்டுக்கும் வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட உரிமையோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
உதயநிதி பேசும்போது, தான் இளைஞர் அணி செயலாளராக 3½ ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தலைவரை ஒரு நிகழ்ச்சிக்கும் கூப்பிடவில்லை என்றார். ஏன் கூப்பிடவில்லை? ஒரு வேளை நான் இப்போது ஏற்றிருக்கக்கூடிய ஆட்சி பொறுப்புக்கு தலைமை ஏற்று இருக்கின்ற காரணத்தினால், பல்வேறு பணிகள் இருப்பதால், இடையூறு தந்துவிடக்கூடாது என கருதி அந்த நல்ல எண்ணத்தோடு அதை அவர் தவிர்த்திருப்பார் என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் அவரை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன். டி.வி., பத்திரிகைகள், ஊடகங்களில் பார்க்கிறேன். சமூக ஊடகங்களில் நல்ல செய்தியும் வருகிறது. கேலி, விமர்சனங்கள் செய்த செய்திகளும் வருகின்றன. அதனை கண்காணித்து வருகிறேன்.
நவீன பிரசாரங்கள்
முன்பெல்லாம், வானொலியில் தான் செய்திகள் கேட்போம். அதன்பின் பத்திரிகைகள் வந்தன. செய்திகளை படித்தோம். தொடர்ந்து டி.வி. வந்தது. பத்திரிகைகளுக்கு முன்னதாக டி.வி.யில் செய்திகள் வந்தன. அதனையும் தாண்டி இன்று வாட்ஸ்-அப், பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், டெலிகிராம் மூலம் நாம் வளர்வதை தடுக்க எப்படியாவது நம்மை ஒழிக்க திட்டமிட்டு நடத்தக்கூடிய நவீன பிரசாரங்கள் நடக்கிறது. அதை முறியடிக்க உங்களால்தான் முடியும்.
பிடிவாதமாக இருக்கிறாய்
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அப்போது அண்ணா மணிவிழாவை நடத்துவதற்கு, அண்ணாவிடம் தேதி கேட்க வீட்டிற்கே சென்றேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் நான் வந்து சென்றதை அண்ணாவிடம் யாரோ சொல்லிவிட்டார்கள். உடனே அவர் என்னை அழைத்து வரும்படி சொன்னார்.
அவர் பயன்படுத்திய அரசு காரை அனுப்பி என்னை அழைத்து வர சொன்னார், அண்ணா. கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து என்னை அழைத்து சென்றார்கள். அண்ணா என்னிடம் என்ன விஷயம் என்று கேட்டார். உங்கள் மணிவிழா நடத்த தேதி வேண்டும் என்றேன். இது உங்க அப்பாவுக்கு தெரியுமா என்றார். தெரியும் என்றேன். சரி தருகிறேன் என்றார். இல்லை இப்போதே கொடுங்கள் என்றேன். உடனே அண்ணா, என்ன உங்க அப்பாவை போல பிடிவாதமாக இருக்கிறாய் என்றார். அதன் பின்னர் தேதியும் கொடுத்தார்.
உயிர் இருந்து என்ன பயன்?
அண்ணா பேசும்போது, "என்னை இந்த நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று என் குடும்பத்தினர் தடுத்தார்கள். கட்சியின் முன்னோடிகள் போகக்கூடாது என்று கட்டாயப்படுத்தினார்கள். மருத்துவர்கள் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார்கள். அத்தனையும் மீறி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கும்போது, அந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால், இந்த உயிர் இருந்து என்ன பயன்?' என்று சொன்னார்.
இதெல்லாம் வரலாறு. இப்படிப்பட்ட வரலாற்றை பெற்றதுதான் தி.மு.க. அதன் துணை அமைப்புகளில் ஒன்றான இளைஞர் அணியும் இந்த வரலாறை பெற்றுள்ளது. அந்த வரலாறை பேணி, பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், உங்களை நம்பி நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற உணர்வோடு தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.