நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 'மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்' - சீமான்


நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் - சீமான்
x
தினத்தந்தி 30 March 2024 8:30 PM GMT (Updated: 30 March 2024 8:30 PM GMT)

‘நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்’ என்று தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூஸ்ஜேனை ஆதரித்து தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அணு உலைக்கு எதிராக இங்குள்ள கட்சிகள் எதுவும் குரல் கொடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் எடுத்து கொடுத்தவர்கள், அதனை திறந்து வைத்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து உள்ளீர்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க சென்றவர்களை, எந்த மரபையும் கடைப்பிடிக்காமல் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்?. எங்கிருந்து அந்த உத்தரவு வந்தது?. உங்கள் உயிரை பறித்தவர்களுக்கு ஓட்டு போட்டால் நீங்கள் மானத்தமிழரா?, மரித்து போன இனமா? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

துப்பாக்கி சூடு தொடர்பாக நடந்த நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தனிநபர் விசாரணை அறிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு கூறி உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பத்திரத்தில் தி.மு.க. பணம் வாங்கி உள்ளது. பா.ஜனதா கட்சி கலவரத்தால் வளர்ந்த கட்சி. மணிப்பூர் கலவரத்துக்கு தி.மு.க.வினர் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டபோது ஏதேனும் குரல் கொடுத்தார்களா?.

7 சதவீதம் வாக்கு வைத்து இருந்த எனக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் 0.7 சதவீதம் வாக்கு வைத்து உள்ள த.மா.கா.வுக்கு அவர்கள் கேட்ட சைக்கிள் சின்னம் ஒதுக்கி உள்ளனர். 5 ஆண்டுகள் மக்களை ஆளக்கூடிய நபர்களை நல்லவர்களாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடி தொழிலை அரசே மேற்கொள்ளும். மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும். தற்போது உயர்ரக மீன்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நமக்கு கிடைப்பதெல்லாம் சாதாரண சாளை உள்ளிட்ட மீன்கள் தான். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள மக்களும் ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களை சாப்பிடக்கூடிய நிலையை உருவாக்குவோம்.

பல ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். எங்களை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story