கஞ்சா கடத்தல், விற்பனையை முழுமையாக தடுக்க முடியாதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


கஞ்சா கடத்தல், விற்பனையை முழுமையாக தடுக்க முடியாதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

கஞ்சா கடத்தல், விற்பனையை முழுமையாக தடுக்க முடியாதது ஏன்? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசு விளக்க வேண்டும்

கஞ்சா விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், அதற்காக 'ஆபரேஷன் கஞ்சா 2.0' ஒன்றை ஆரம்பித்த தமிழ்நாடு காவல் துறை, அதன் மூலம் கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் எவ்வளவு தடுத்தது என்றும், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும், எத்தனை குற்றவாளிகள் பிடிபட்டனர் என்றும், எவ்வளவு பேருக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டது என்பதையும் தி.மு.க. அரசு விளக்க வேண்டும்.மேலும், 'ஆபரேஷன் கஞ்சா 2.0' வெற்றி எனில், ஏன் தற்போது 'ஆபரேஷன் கஞ்சா 3.0' நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது என்றும், காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

கஞ்சா போதையில் கொள்ளை

தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி

கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது?. இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்?. கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?.

போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை கைது செய்ய தடுப்பவர்கள் யார்?. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை.

இனியாவது காவல் துறையினரை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், சட்டம் - ஒழுங்கையும், குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story