தி.மு.க.வை பிரதமர் மோடி விமர்சிக்க காரணம் என்ன?முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை 'இந்தியா' கூட்டணி கெடுத்துவிட்டது என்று முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திருவாரூர்,
திருவாரூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? தி.மு.க. மேல் அவர் ஆத்திரம் கொள்வது ஏன்? என்பது குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை கொட்டுகிறார். மாநிலம் மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார்.
தி.மு.க. மேல் ஏன் அவருக்கு இவ்வளவு கோபம்?. இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை 'இந்தியா' கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை 'இந்தியா' கூட்டணி கலைத்துவிட்டது.
தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதுபோல் எத்தனையோ ஏச்சுகள், ஏளனங்கள், அரட்டல்கள், மிரட்டல்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள்தான் நாங்கள். வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்" இவ்வாறு அவர் கூறினார்.