அரசு கட்டிடத்தை சுற்றி வளைத்த காட்டு யானைகள் - உள்ளே தங்கியிருந்த போலீசார் 4 மணி நேரத்துக்கு பின்னர் மீட்பு


அரசு கட்டிடத்தை சுற்றி வளைத்த காட்டு யானைகள் - உள்ளே தங்கியிருந்த போலீசார் 4 மணி நேரத்துக்கு பின்னர் மீட்பு
x

அரசு கட்டிடத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டு சுற்றி வளைத்தன. இதனால் உள்ளே தங்கியிருந்த போலீசார் 4 மணி நேரத்துக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக 7 யானைகள் கொண்ட கூட்டம் நடமாடி வருகிறது. இவை அவ்வப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றன. மேலும் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ்சை வழிமறிப்பதால், பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கெத்தை மின் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பென்ஸ்டாக் பகுதியில் போலீசார் கெத்தை அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் 4 போலீஸ்காரர்கள் இரவு பணி முடிந்து மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் காட்டு யானைகள் போலீசார் தங்கி இருந்த அறையை முற்றுகையிட்டன. நீண்ட நேரமாக அதே பகுதியில் நின்று கொண்டிருந்தன. ஜன்னல் வழியாக யானைகள் நிற்பதை பார்த்து போலீசார் அச்சம் அடைந்தனர். உடனே அறைக்குள் இருந்த மின் விளக்குகளை அணைத்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வன காவலர் துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்ட பட்டாசுகளை வெடித்தனர். அதன் பின்னர் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. இதையடுத்து கட்டிடத்திற்குள் இருந்த போலீசார் உடனடியாக அங்கிருந்து வெளியேறி, போலீஸ் வாகனத்தில் ஏறி மஞ்சூர் போலீஸ் நிலையம் சென்றனர்.

முன்னதாக காட்டு யானைகள் முற்றுகையிட்டதால், அறைக்குள் இருந்த போலீசார் 4 மணி நேரம் சிக்கி தவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் யானைகளை விரட்டி போலீசாரை மீட்டனர். இந்தநிலையில் காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்து சென்று விட்டதா அல்லது அங்கு சுற்றி வருகிறதா என்பது குறித்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனவர்கள் பிச்சை, சுரேஷ், வனக்காப்பாளர் அர்ஜூன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று கண்காணித்தனர்.


Next Story