தமிழகம் முழுவதும் பரவலாக மழை: மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்


தமிழகம் முழுவதும் பரவலாக மழை: மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 8 Jan 2024 11:19 AM IST (Updated: 8 Jan 2024 2:45 PM IST)
t-max-icont-min-icon

மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை மற்றும் தென்மாவட்ட மக்கள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் பலத்த கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், அடுத்த இரு தினங்களுக்கு 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டால் மழை பாதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என பொதுமக்கள் கருதுகின்றனர்.

எனவே, அடுத்த இரு தினங்களில் பெய்யக்கூடிய மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story