மதத்தின் பெயரால் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டனர்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளான இன்று கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
எனது அரசியல் பயணத்திற்கு மிகவும் முக்கியமான இடம் காஞ்சி மாநகர். அண்ணா சதுக்கத்திலிருந்து சுடர் ஏந்தி காஞ்சி மாநகருக்கு கொண்டு வந்தேன். தமிழ் சமுதாயத்தை மாற்றப்போகும் திராவிடச்சுடரை ஏந்தி வந்திருக்கிறேன்.
இந்த மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை தொடங்கி வைத்தது என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம். மகளிர் உரிமைத்தொகையை பெண்கள் பெறும் காலம் வரை நானே ஆள்வதாக அர்த்தம். உரிமைத்தொகை எத்தனை ஆண்டுகள் வழங்கப்படுகிறதோ அத்தனை ஆண்டுகள் நான் ஆள்வதாக அர்த்தம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒரு சிலர் பொய் வதந்திகளை பரப்பி முடக்க நினைத்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என சிலர் கூறினார்கள். அறிவித்துவிட்டால் எதையும் நிறைவேற்றிக்காட்டுபவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நிதி நெருக்கடி காரணமாகவே ஆட்சிக்கு வந்த உடன் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. நிதிநிலை சரியில்லாததாலேயே ரூ.1000 உரிமைத்தொகையை முன்னரே வழங்க முடியவில்லை. நிதிநிலை தற்போது சற்று சரியானதும் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளேன்.
மதத்தின் பெயராலும், பழமையின் பெயராலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டனர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, அடிமையாக நடத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் இயற்கை சுழற்சியை கூட 'தீட்டு' எனக்கூறி முடக்கி வைத்தனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களை முடக்கிவைத்தனர். உயர் வகுப்பை சேர்ந்த பெண்களும் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தனர். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லை என்பதால் திராவிட இயக்கத்தின் மீது சிலருக்கு கோவம்.
பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. கைம்பெண் மறுமணம், பெண் குழந்தை கல்வி என சமூக சீர்திருத்தங்களை உருவாக்கியதே திராவிட இயக்கம். ஆண்களை விட பெண்களே அதிகம் படிக்கின்றனர். அதுவும் நன்றாக படிக்கின்றனர்.
ஆண்களை விடவும் உயர்ந்தவர்களாக பெண்கள் வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடலின் நோக்கம். வீட்டில் பிரதிபலன் பாராமல் உழைக்கும் பெண்களை 'ஹவுஸ் ஒய்ப்' என சாதாரணமாக கூறி விடுகின்றனர்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்ணின் பல மணி நேர உழைப்பு மறைந்துள்ளது. மனைவி வேலைக்கு செல்லவில்லை வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என சிலர் கூறுவார்கள். பெண்கள் வீட்டில் பார்க்கும் வேலைகளை எந்த ஆணும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தாய்மையும், பெண்மையுமே உலகை வழிநடத்துகிறது' என்றார்.