மாநாடு போன்ற கூட்டம் திருச்சியில், லட்சிய பிரகடனத்தை 7-ந்தேதி வெளியிடுகிறேன் மு.க.ஸ்டாலின் பேட்டி


மாநாடு போன்ற கூட்டம் திருச்சியில், லட்சிய பிரகடனத்தை 7-ந்தேதி வெளியிடுகிறேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 2 March 2021 9:20 AM IST (Updated: 2 March 2021 9:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பிடிப்பதற்கான 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம், லட்சிய பிரகடனத்தை திருச்சியில் 7-ந்தேதி வெளியிட உள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டும் வாழ்த்துத் தெரிவித்த அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன். இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் மக்களெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் வரும் 7-ந்தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை தமிழகத்திற்கான, தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிட இருக்கிறேன்.

2 கோடி குடும்பங்கள்

தமிழ்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலை நோக்குப் பார்வையை அந்த நிகழ்ச்சியில் வெளியிடவிருக்கிறேன். அடுத்த 10 ஆண்டிற்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வரும் சூழ்நிலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். இதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. இதுவரை தமிழக மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் அடிப்படையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து அந்தத் தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்தத் தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை நான் வெளியிடவிருக்கிறேன். தமிழகத்திற்கான எனது தொலைநோக்குப் பார்வை அறிக்கையினை, அடுத்த 20 நாட்களுக்குள்ளாக 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிறந்தநாள் செய்தி

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் பிறந்தநாளை முன்னிட்டு என்ன சொல்லவிருக்கிறீர்கள்?

பதில்:- இன்றைக்கு ஊதாரித்தனமான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியை மாற்றுவதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பணியாற்றுவதில் இருந்து என்றைக்கும் தி.மு.க. பின்வாங்காது. எப்படி கொரோனா நோயில் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு துணைநின்றோமோ, அதேபோல் தொடர்ந்து எந்தநிலையில் இருந்தாலும் தி.மு.க. மக்களுக்கு பணியாற்றும் என்பதைத்தான் என்னுடைய பிறந்தநாள் செய்தியாக நான் சொல்லிக்கொள்கிறேன்.

ஊழலுக்கு துணை

கேள்வி:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தி.மு.க. மீது பல்வேறு புகார்களை விழுப்புரம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. -பா.ஜ.க. ‘டபுள் என்ஜின்' மாதிரி செயல்படும் என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதாவது ஏற்கனவே மோடி பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது அமித்ஷா பேசி இருக்கிறார். நாளைக்கு மத்தியில் இருந்து பா.ஜ.க.விலிருந்து வருபவர்கள் அத்தனை பேரும் அதைத்தான் பேசப்போகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால், ஊழல்களையே செய்து கொண்டிருக்கும் ஓ.பி.எஸ். ஒரு பக்கமும், ஈ.பி.எஸ். ஒரு பக்கமுமாக இருவரது கரங்களைத்தான் பிடித்துத் தூக்கி உயர்த்திக் காட்டினார்கள். அதிலிருந்து ஊழலுக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

கேள்வி:- தற்போது ஆட்சியில் கடன் அதிகமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கடன் அதிகரிப்பதைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

பதில்:- நிச்சயமாக அதெல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளர்கள் பட்டியல்?

திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு 7-ந்தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த வேளையில், தேர்தல் தேதி அறிவிப்பால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில்தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story