அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி முதல் 2 நாட்கள் சூறாவளி பிரசாரம்
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி முதல் 2 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். 17 சட்டமன்ற தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வாழப்பாடியில் இருந்து மீண்டும் தனது பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். வரும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் மேலும் 17 சட்டமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அவர் வாக்கு சேகரிக்கிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விராலிமலையில் தொடக்கம்
16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு விராலிமலையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார். காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமானுக்கும், மதியம் 12 மணிக்கு திருமயத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.கே.வைரமுத்துவுக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
மதியம் 1.15 மணியளவில், அறந்தாங்கியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ராஜநாயகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாலை 3 மணிக்கு ஆலங்குடி தொகுதி ஆவணம் கைகாட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் தர்ம.தங்கவேலுவுக்கும், 4 மணிக்கு பேராவூரணியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.திருஞானசம்பந்தத்திற்கும், 5 மணிக்கு பட்டுக்கோட்டையில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரங்கராஜனுக்கும், மாலை 6 மணிக்கு ஒரத்தநாட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கத்திற்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
இரவு 7 மணிக்கு கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயபாரதிக்கும், இரவு 7.30 மணிக்கு தஞ்சாவூரில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.அறிவுடைநம்பிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.
17-ந்தேதி பிரசாரம்
17-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருவையாற்றில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து காலை 10 மணிக்கு பாபநாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.கோபிநாதனுக்கும், 11 மணிக்கு கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கும், மாலை 3 மணிக்கு திருவிடைமருதூர் தொகுதி நாச்சியார்கோவிலில் அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணிக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 4 மணிக்கு நன்னிலம் தொகுதி குடவாசலில் அமைச்சர் ஆர்.காமராஜூக்கு ஆதரவாக பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு மன்னார்குடியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கத்தும், திருவாரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்துக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story