பொதுமக்களின் விருப்பத்தை அறிந்து தயாரிக்கப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று வெளியிடுகிறார்
பொதுமக்களின் விருப்பத்தை அறிந்து தயாரிக்கப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மத்திய மந்திரி நிதின் கட்காரி வெளியிடுகிறார்.
சென்னை,
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணி, தி.மு.க. அணி ஆகிய பிரதான அணிகளுடன், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அணி, சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தமது வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக தயாரித்து அளித்து உள்ளன.
அக்கட்சிகள், குழுக்களை அமைத்து தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டு உள்ளன. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. மட்டும் சற்று வித்தியாசமான முறையில், ‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ என்ற தலைப்பில் ஒவ்வொரு தொகுதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவை என்ன என்று கேட்டறிந்து அவற்றைத் தொகுத்து அறிக்கையாகத் தயாரித்துள்ளனர்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கும் விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி வெளியிடுகிறார். இந்த அறிக்கையில் தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அத்தனை அம்சங்களும் இடம்பெற்று இருக்கும்.
குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவது, மருத்துவம் மற்றும் சாலை வசதிகளை அதிகரிப்பது, துறைமுகங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story