தொகுதி கண்ணோட்டம்: பாபநாசம்


தொகுதி கண்ணோட்டம்: பாபநாசம்
x
தினத்தந்தி 22 March 2021 4:01 PM GMT (Updated: 22 March 2021 4:01 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன.

இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு தொகுதிகள் எதுவும் சேர்க்கப் படவில்லை. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் மட்டுமே உள்ளன. இவற்றில் பாபநாசம் தொகுதியில் பாலைவனநாதர் கோவில், அதில் நாயக்கர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் வரலாற்று சிறப்பு பெற்றவை.

தொகுதி சீரமைப்புக்கு பின் பாபநாசம் தொகுதி 172-வது வரிசையில் உள்ளது. இந்த தொகுதி 1952-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1957-ம் ஆண்டில் மட்டும் இரட்டை தொகுதியாக இருந்தது. தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட வலங்கைமான் தொகுதியில் இருந்த அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகள் மற்றும் பாபநாசம் ஒன்றியத்தை சேர்ந்த 34 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தை சேர்ந்த 10 ஊராட்சிகள், பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, மெலட்டூர், சுவாமிமலை ஆகிய 5 பேரூராட்சிகளும் பாபநாசம் தொகுதியில் அடங்கி உள்ளன.

இந்த தொகுதிக்குட்பட்ட கபிஸ்தலம் என்ற கிராமமே காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் சொந்த ஊர். காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்த இந்த தொகுதியில் 2006-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. இந்த தொகுதியில் தான் 1989-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி சட்டசபை துணை சபாநாயகராக பணியாற்றி உள்ளார்.

இதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மூன்று முறை போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கண்ணு தமிழக வேளாண்மை துறை அமைச்சராக இருந்து, தனது பதவி காலத்திலேயே இறந்து விட்டார். அதன் பிறகு இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி படுகை பகுதியில் உள்ள பாபநாசம் தொகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு நெல், வெற்றிலை, கரும்பு, வாழை போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர வெல்லம் உற்பத்தி, உலோக சிலைகள் தயாரிப்பு, மரத்தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு போன்றவையும் இந்த தொகுதியில் பிரபலமானவை. இங்கு தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் தொழில் வளர்ச்சி இல்லை என்பது பெரும் குறையாகவே உள்ளது. வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பாபநாசம் பகுதியில் மேற்கொண்டுள்ளார்.

அதில் பாபநாசம் ஒன்றியத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அண்டக்குடி முதல் சுந்தரப்பெருமாள் கோவில் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடி செலவில் 2 உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவடைந்து சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. திருவையாறு-கும்பகோணம் சாலையில் மேட்டு தெரு, இளங்காய் குடியை இணைக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ராஜகிரியில் இருந்து குடமுருட்டி மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கிடையே ரூ.7 கோடியில் 2 உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அய்யம்பேட்டையில் இருந்து கணபதி அக்கிரஹாரத்தை இணைக்கும் குடமுருட்டி-காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் வெண்ணாற்றின் குறுக்கே களக்குடியில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் ரூ.1 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பாபநாசம் தாசில்தார் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சை-அரியலுர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ரூ.56 கோடியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளது. பாபநாசம் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து நெடுஞ்சாலை, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள சாலைகள் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவை அமைக்க வேண்டும். நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை பாபநாசம் ரெயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநல்லூர்-குடிக்காடு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும். காவிரி-குடமுருட்டி ஆறுகளில் தற்போது நடை பெற்று கொண்டிருக்கும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாபநாசம் துணை மின் நிலைய விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வேளாண்மை கல்லூரி, மருத்துவக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி போன்றவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது.

பாபநாசம் தலைமையிடத்தில் உள்ள அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படாமல் உள்ளதால் மக்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பாபநாசம் வட்டார கல்வி அலுவலக 
கட்டிடம், அரசு கிளை நூலக கட்டிடம் ஆகியவற்றிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.ஏற்கனவே இயக்கப்பட்ட பாபநாசம் சென்னை இடையேலான நேரடி பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பாபநாசம் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்க வேண்டும். 

தஞ்சை-விக்ரவாண்டி வரை நடைபெற்று கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து பாபநாசம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் ஆகியவை இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளாகும்.

பாபநாசம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரக கோவில்கள், பரிகார கோவில்கள் போன்ற ஆன்மிக தலங்கள் அதிகஅளவில் உள்ளன எனவே பாபநாசத்தை மையமாக வைத்து சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த தொகுதியில் முஸ்லிம்கள், வன்னியர், மூப்பனார், உடையார், கள்ளர், செட்டியார், ஆதிதிராவிடர் என அனைத்து சாதியினரும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு அனைத்து சாதியினரும் பரவலாக இருந்தாலும் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை சாதி ஓட்டுகள் தீர்மானிப்பது கிடையாது. வேட்பாளர்களின் தேர்வை பொறுத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொகுதியில் இதுவரை 15 முறை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியில் 8 முறை காங்கிரசும், 3 முறை அ.தி.மு.க.வும், 2 முறை த.மா.கா.வும், 1 முறை தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளது. 1 முறை சுயேட்சை வெற்றி பெற்றுள்ளார். தற்போது 16-வது தேர்தலை சந்திக்க உள்ளது.


இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

பாபநாசம் சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1952 சுயேட்சை வெற்றி

சுயம்பிரகாசம்(சுயே).................................22,134

அப்துல்மஜித்சாகிப்(காங்).......................19,625

1957 காங்கிரஸ் வெற்றி

இந்த தேர்தலில் பாபநாசம் தொகுதி இரட்டை தொகுதியாக இருந்தது. எனவே தனி, பொது உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களே வெற்றி பெற்றனர்.

வெகங்கடாசல நாட்டார்(காங்)................38,971

சுப்பிரமணியன்(காங்)...............................31,531

அரிதாரநாதன்(சுயே)................................17,195

1962 காங்கிரஸ் வெற்றி

திட்டை சுப்பிரமணியன்(காங்)................33,144

சித்தமல்லி சோமசுந்தரம்(தி.மு.க).........28,904

1967 காங்கிரஸ் வெற்றி

சவுந்தராஜமூப்பனார்(காங்).....................41,323

முகமதுசாலி(மு.லீக்)................................31,077

1971 தி.மு.க. வெற்றி

கணபதி(தி.மு.க)......................................43,497

ராமகிரு‌‌ஷ்ணன்(பழைய காங்)...............33,884

1977 காங்கிரஸ் வெற்றி

சவுந்தர்ராஜன்(காங்)................................24,904

சச்சிதானந்தம்(தி.மு.க)...........................23,268

1980 காங்கிரஸ் வெற்றி

ராஜாராமன்(காங்)....................................36,101

கோவி.நாராயணசாமி(அ.தி.மு.க)..........33,152

1984 காங்கிரஸ் வெற்றி

ராஜாராமன்(காங்)....................................52,202

சச்சிதானந்தம்(தி.மு.க)...........................34,924

1989 காங்கிரஸ் வெற்றி

ஜி.கே.மூப்பனார்(காங்)............................36,278

எஸ்.கல்யாணசுந்தரம்(தி.மு.க)...............35,186

1991 காங்கிரஸ் வெற்றி

ராஜாராமன்(காங்)....................................54,445

கல்யாணசுந்தரம்(தி.மு.க)......................32,520

1996 த.மா.கா. வெற்றி

கருப்பண்ண உடையார்(த.மா.கா)........58,757

திருநாவுக்கரசு(சுயே)...............................20,415

2001 த.மா.கா. வெற்றி

ராம்குமார்(த.மா.கா)................................55,830

கல்யாணசுந்தரம்(தி.மு.க)......................49,198

2006 அ.தி.மு.க. வெற்றி

துரைக்கண்ணு(அ.தி.மு.க).....................60,027

ராம்குமார்(காங்).......................................53,026

2011 அ.தி.மு.க. வெற்றி

துரைக்கண்ணு(அ.தி.மு.க).....................85,635

ராம்குமார்(காங்).......................................67,628

2016 அ.தி.மு.க. வெற்றி

துரைக்கண்ணு(அ.தி.மு.க)....................82,614

லோகநாதன்(காங்)..................................58,249

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள்..........2,60,339

ஆண்கள்................................1,27,049

பெண்கள்...............................1,33,575

மூன்றாம் பாலினத்தவர்..........15


Next Story