தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரி நிதின் கட்காரி வெளியிட்டார்


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரி நிதின் கட்காரி வெளியிட்டார்
x
தினத்தந்தி 23 March 2021 12:11 AM GMT (Updated: 2021-03-23T05:41:04+05:30)

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதுடன் சென்னை மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரி நிதின் கட்காரி சென்னையில் வெளியிட்டார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முதல் கட்டமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது முறையாக பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரிலான 14 தலைப்புகளில் 25 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இரண்டடுக்கு மதுரவாயல் சாலை

பின்னர் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் பெறும். எத்தனால் மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருவதால் விவசாயிகள் அதன் மூலமாக நல்ல பலன் பெறுவார்கள். அதேபோல பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் வரும் நாட்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக அந்த இ.வாகனங்களும் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் அதிகரிக்கும்.

அதேபோல பல்வேறு சாலை கட்டமைப்புகளும் தமிழகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறோம். அதில் பல நிறைவடைந்து உள்ளன. சென்னை - மதுரவாயல் உயர்மட்ட சாலை பழைய வடிவத்தில் இருப்பது தனக்கு திருப்தி இல்லை. எனவே புதிதாக அதற்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு அது இரண்டு அடுக்கு கொண்ட ஒரு வடிவமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்

வேலைவாய்ப்பின்மையை போக்குவதற்காக 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் ஆண்டுதோறும் உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடமே வழங்கப்படும்.

வாரியத்திடம் கோவில்

மதச்சார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி இந்துக்கோவில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும். 18 முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுனர்உரிமம் இலவசமாக வழங்கப்படும்.

8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இலவசமாக ‘டேப்லெட்' வழங்கப்படும். அதிகமான நிதி ஒதுக்கீட்டுடன் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்படும். மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேரடியாக வழங்கப்படும்

மாவட்டம் தோறும்பல்நோக்கு மருத்துவமனை

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நிறுவப்பட்டு, அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2022-க்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும்

நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும், முற்றிலுமாக 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும். இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மணல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்

கள் இறக்க அனுமதி

சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்படும். கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். சட்டங்களை விவாதிக்கும் விஷயத்தில் அறிவார்ந்த பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய சட்ட மேலவை இருப்பது பயனுள்ளதாக இருப்பதால், சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும். ஈரோடு மாவட்டம் மலையம் பாளையத்தில் பாறையில் 1330 திருக்குறள் அமைக்கப்படும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் இருந்து, ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும். தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும். தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்ப விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி வி.கே.சிங், காரைக்குடி தொகுதி வேட்பாளர் எச்.ராஜா, கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story