பூரண மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்க்க முயற்சி மேற்கொள்வோம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி


பூரண மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்க்க முயற்சி மேற்கொள்வோம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 26 March 2021 5:10 AM IST (Updated: 26 March 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

பூரண மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்க்க உரிய முயற்சி மேற்கொள்வோம் என்று விழுப்புரத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று காலை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகள் விவரம் பின்வருமாறு:-

உறுதிமொழிகள்

* தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இடஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் தீய உள்நோக்கோடு, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான சதிமுயற்சிகளையும் முறியடித்து சமூகநீதியை பாதுகாப்போம்.

* ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நெடுங்கால கனவுத்திட்டமான இந்துராஷ்ட்ரத்தை அமைக்க பெருந்தடையாகவுள்ள இந்திய அரசமைப்பு சட்டத்தை மெல்ல மெல்ல நீர்த்துப்போகச்செய்யும் பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவதோடு, அதற்கான களத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்து போராடுவோம்.

‘ஒரே தேசம்-ஒரே கல்வி’

* ‘ஒரே தேசம்-ஒரே கல்வி' என்னும் அடிப்படையில், தேசிய கல்வி கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் ‘ஒரே மதம்-ஒரே மொழி ஒரே கலாசாரம்' என்னும் சங்பரிவார்களின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பா.ஜ.க. மேற்கொள்ளும் பாசிச முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம், மாநில அரசுகளே கல்விக்கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய தொடர்ந்து களமாடுவோம்.

* விவசாயம், தொழில்வளம், வணிகம் போன்றவற்றையும் கார்ப்பரேட்மயமாக்கி, சிறு-குறு நடுத்தர விவசாயிகள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் ஆகிய அனைவரையும் வலுவிழக்கச் செய்யும் வகையில் செயல்படும் பா.ஜ.க.வின் துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வெகுமக்களுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை பாட்டாளி மக்களின் பேராதரவோடு தூக்கி எறிவோம்.

* நீர், நிலம், காற்று ஆகியவற்றை நஞ்சாக்கி பாழ்ப்படுத்தும் வகையிலான ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து போராடி, விவசாயம், குடிநீர் போன்றவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குரிய வாழ்வாதாரங்களான சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம்.

* கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்கிடவும் மற்ற இலவச திட்டங்களை ஒழித்திடவும் வலியுறுத்தி போராட மக்களிடையே விழிப்புணர்வை வளர்த்தெடுப்போம்.

மதுவிலக்கு

* டாஸ்மாக் மதுக்கடைகளை நிலையாக மூடுவதற்கு மக்கள் துணையோடு தொடர்ந்து போராடுவோம். மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்த்தெடுக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

* தேசிய இனவிடுதலை கருத்தியலில் நம்பிக்கையுடைய ஜனநாயக சக்திகளோடு இணைந்து நின்று, ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சமூகநீதி, தாய்மொழி வழிக்கல்வி, மாநில உரிமைகள் உள்ளிட்ட 45 தலைப்புகளில் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் தொல்.திருமாவளவன் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தீங்கு விளைவிக்கும் அணி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்க்க உரிய முயற்சி மேற்கொள்வோம். சிங்கள அரசுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிப்பதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. கச்சத்தீவை மீட்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணி ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணியாகும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தேர்தலை நடத்துவதில் மட்டுமே உள்ளது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்து வருகிறது. ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கில்லை. உள் ஒதுக்கீடு உரிய மக்களுக்கு சென்று சேர வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story