‘‘அவதூறு பரப்பி ஆட்சிக்கு வர நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது’’ தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘‘அராஜக தி.மு.க. ஆட்சிக்கு வராது. அவதூறு பரப்பி ஆட்சிக்கு வர நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது’’, என்று தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வேளச்சேரி தொகுதி காந்தி சாலை பகுதியில் தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:-
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி வெற்றிக் கூட்டணி அமைந்திருக்கிறது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பற்றியும், கூட்டணி தலைவர்கள் குறித்தும் மக்களிடையே அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. அரசு மீது திட்டமிட்டு பழி சுமத்தி வருகிறார்.
மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரங்களில் எந்த இடத்திலாவது மக்களுக்கு தி.மு.க. இதை செய்தது, அதை செய்தது என பேசுகிறாரா? கிடையாது ஏனெனில் மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களையும் தி.மு.க. அரசு செய்தது கிடையாது. ஆனால் நாங்கள் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்கள் மக்களுக்காக செய்த திட்டங்கள், அவர்களின் வழியை பின்பற்றி அ.தி.மு.க. அரசு முன்னெடுத்து வரும் மக்கள் திட்டங்களை பற்றி வாக்காளர்களிடம் பேசி வருகிறோம்.
மக்களை குழப்புகிறார்
அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடையே பொய்யான தகவல்களை கூறி, மக்களை குழப்பி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக வாக்காளர்கள் சிந்தித்து முடிவு எடுக்கக் கூடியவர்கள். எனவே மு.க.ஸ்டாலின் எத்தனை பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும் மக்கள் அதை நம்ப மாட்டார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை கண்டுபிடித்து விடுவார்கள். மு.க.ஸ்டாலினின் மூலதனமே பொய்தான். அவரது பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை.
மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போதும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சென்னை மக்களுக்காக, தமிழக மக்களுக்காக என்ன செய்தார்? ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க. அரசில் தான் வளர்ச்சி பாதையை நோக்கி சென்னை மாநகரம் செல்லத் தொடங்கியது.
வார்த்தை ஜாலத்தால் மயக்க முடியாது
வார்த்தை ஜாலத்தால் மக்களை மயக்க முடியாது. மக்களிடம் திட்டமிட்டு அவதூறு பரப்பி வெற்றி பெற்றுவிடலாம், ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எல்லா தொழில்களும் அமைதியாக நடைபெறுகிறது. இது தி.மு.க. ஆட்சியில் சாத்தியமா?
தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ரவுடி ராஜ்ஜியம், கட்டப்பஞ்சாயத்து என அராஜகத்தின் உச்சகட்ட போக்கு தமிழகத்தில் நிலவியதை மக்கள் மறக்க முடியுமா? அராஜக தி.மு.க. ஆட்சி நிச்சயம் ஆட்சிக்கு வரவே வராது.
அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கின்றன. கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றங்கள் தடுக்கப்படுவதுடன், குற்றங்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கிறது. இது தி.மு.க. ஆட்சியில் நடக்குமா? இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன்...
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு விலையில்லா 6 கியாஸ் சிலிண்டர்கள், விலையில்லா வாஷிங்மெஷின், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, வீடு தேடி ரேஷன் பொருட்கள், கட்டணமில்லா கேபிள் டி.வி. இணைப்பு, 18 வயது நிரம்பியவர்களுக்கு அரசு சார்பில் டிரைவிங் லைசென்ஸ், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித்தொகை உயர்வு, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, புதிய ஆட்டோக்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம், வீடில்லா ஏழை மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் என நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைந்தவுடன் நிறைவேற்றி தருவோம். இதையெல்லாம் மக்கள் யோசித்து தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தரவேண்டும். மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திட செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மவுலிவாக்கம்
சென்னை ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து, மவுலிவாக்கம் பாய்கடை பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் இறுமாப்புடன் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதனால்தான் ஏதேதோ கவர்ச்சியான டைட்டில்களை போட்டு, எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என கனவு காண்கிறார்.
அவரது கனவு எப்போதுமே நிறைவேற முடியாது. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, எந்த விடியலையும் தரப்போவதும் இல்லை.
பிரசாரத்தில் ஒலித்த ஜெயலலிதா குரல்
முன்னதாக தேர்தல் பிரசாரம் நடைபெறும் பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சுகள் ஆடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் எம்.கே.அசோக் (வேளச்சேரி), கே.பி.கந்தன் (சோழிங்கநல்லூர்), டி.கே.எம்.சின்னய்யா (தாம்பரம்), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (பல்லாவரம்), மாதவரம் வி.மூர்த்தி (மாதவரம்) ஆகியோரை ஆதரித்தும் சென்னை புறநகர் பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story