தமிழகம் முழுவதும் திமுக அலை அல்ல... சுனாமி வீசி வருகிறது...- மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகம் முழுவதும் திமுக அலை அல்ல... சுனாமி வீசி வருகிறது என மேட்டுப்பாளையம் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது ஸ்டாலின் பேசியதாவது: -
தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பிரசாரத்திற்கு வருகிறார். இதே முதல்வர் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டாரா?. நான் சென்று பார்வையிட்டேன். திமுக சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இப்போது ஒரு வார காலமாக கருத்துகணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
முதல் முதலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது 200 தொகுதிகளில் வெற்றி என எண்ணியிருந்தேன். இப்போது பார்க்கையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வந்துள்ளது.
மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த அரசாங்கம் கொள்ளை அடித்த அரசாங்கம், ஊழல் செய்த அரசாங்கம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய அரசாங்கம், அரசு ஊழியர்கள் உள்பட அனைவரையும் போராட வைத்த அரசாங்கம்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் திமுக அலை அல்ல. சுனாமி வீசி வருகிறது.
ஒரே ஒரு அதிமுக எம்.பி ஓ.பன்னீர் செல்வம் மகன் மட்டும் வெற்றி பெற்றார். அவர் பிஜேபி எம்பியாக செயல்படுகிறார். எனவே இந்த தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் கூட வெற்றி பெறக் கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ வாக செயல்படுவார்கள்.
அதிமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது. விலை வாசிகளை கட்டுப்படுத்த தமிழகம் வளர்ச்சிக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்த உருளைகிழங்கு ஆராய்ச்சி மையம் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அது மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்படும்.
குன்னூரில் அரசு கலை கல்லூரி, பச்சை தேயிலைக்கு ஆதாரவிலை, கட்டுமான வளர்ச்சிக்கு மாஸ்டர் பிளான் தடை சட்டம் அமல்படுத்தப்படும். அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். சுற்றுலா மேம்படுத்தப்படும். இது போன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அதேபோல் மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம், அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். மாநில உரிமைகளை காக்க, சுயமரியாதை காக்க திமுக வெற்றி பெற வேண்டும் என அவர் கூறினார்.
Related Tags :
Next Story