‘‘எத்தனை சோதனை நடத்தினாலும் கவலைப்படமாட்டோம்’’ தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


‘‘எத்தனை சோதனை நடத்தினாலும் கவலைப்படமாட்டோம்’’ தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 11:32 PM GMT (Updated: 2 April 2021 11:32 PM GMT)

மிசாவையே பார்த்தவன் நான், சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்றும், எத்தனை சோதனை நடத்தினாலும் கவலைப்படமாட்டோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஜெயங்கொண்டம், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, குன்னம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.கே.கண்ணன், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரபாகரன், அரியலூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா ஆகியோருக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். அப்போது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வருமான வரி சோதனை

நான் இன்று காலையில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு வந்து இறங்கினேன். திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு இந்த ஜெயங்கொண்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அது என்ன செய்தி என்றால், என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் உள்ளே புகுந்து, காவல்துறை அதிகாரிகள் 100 பேர் பாதுகாப்போடு சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது அ.தி.மு.க. அரசை இன்றைக்கு காப்பாற்றிக் கொண்டு இருப்பது பா.ஜ.க. அரசு - மோடி அரசு. ஏற்கனவே, சோதனைகள் பல நடத்தி அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டில் உரிமைகள் எல்லாம் பறித்திருக்கிறார்கள். வருமான வரி, சி.பி.ஐ வைத்து எல்லாரையும் மிரட்டுகிறார்கள்.

கவலைப்படமாட்டோம்

நான் ஒன்றை மட்டும் மோடிக்கு சொல்கிறேன். இது தி.மு.க. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கு எல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டேன். மிசாவையே பார்த்தவன்தான், எமர்ஜென்சி காலத்தையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை சோதனை நடத்தினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.

அதாவது, தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. எனவே இவர்களை எப்படியாவது மிரட்டி அச்சுறுத்தி அவர்களை வீட்டில் படுக்கவைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தி.மு.க.காரனிடம் நடக்காது. அது அ.தி.மு.க.வினரிடம்தான் நடக்கும்.

பனங்காட்டு நரி

அவர்கள் மாநில உரிமைகளை இன்றைக்கு விட்டுவிட்டு உங்கள் காலில் விழுந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சிட மாட்டோம். எந்த சலசலப்பிற்கும் அஞ்சிட மாட்டோம். இதற்கெல்லாம் மக்கள் பதில் தரும் நாள்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி என்பதை மறந்து விடக்கூடாது.

கருணாநிதி எவ்வாறு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்டோருக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, எல்லா மதத்தினருக்கும் துணை இருந்தாரோ, அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும், ‘அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் செய்வேன்’ என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கிளர்ந்து எழும்

மதுரைக்கு நேற்று இரவே பிரதமர் மோடி வந்துவிட்டார். சரி இரவு சென்று எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை அவர் பார்ப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் பார்க்கவில்லை. பின்னர், தி.மு.க.வை மிரட்ட வேண்டும். தி.மு.க.வை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நேற்றிரவு மோடி தலைமையில் அதிகாரிகள் எல்லாம் வைத்து கூட்டம்போட்டு, குழுவை கூட்டி, கலந்து ஆலோசித்து இன்றைக்கு நம்முடைய வீடுகளில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த சோதனைகளைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம், அஞ்சமாட்டோம், அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம். இன்னும் சோதனை செய்யுங்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நீங்கள் சோதனை செய்ய, சோதனை செய்ய தி.மு.க. இன்னும் கிளர்ந்து எழும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும்

இந்த தேர்தலை பொறுத்தவரையில் நம்முடைய தன்மானம் காப்பாற்றப்படவேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்படவேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும். அதுதான் முக்கியம். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் திரும்பத்திரும்ப உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நாம் இழந்திருக்கும் உரிமைகளை காப்பாற்ற, நம்முடைய மாநில உரிமைகளை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல் இது என்பதை மனதில் வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய அளவிற்கு வெற்றி தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story