பாகிஸ்தான்: போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 போலீசார் பலி


பாகிஸ்தான்: போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 போலீசார் பலி
x
தினத்தந்தி 5 Feb 2024 7:30 AM GMT (Updated: 5 Feb 2024 7:32 AM GMT)

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள போலீஸ் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை தேடுவதற்காக அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வருகிற 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story