4-வது நாள் போர் நிறுத்தம்: 11 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ்


4-வது நாள் போர் நிறுத்தம்: 11 இஸ்ரேலிய பணயக்கைதிகளை  விடுதலை செய்த ஹமாஸ்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 27 Nov 2023 10:59 PM GMT (Updated: 27 Nov 2023 11:00 PM GMT)

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

டெல் அவிவ்,

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதல் மற்றும் 240 பேர் பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்ட சம்பவங்களால் நிலைகுலைந்த இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக்கொண்டு காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கிய இந்த போர், இரு தரப்பிலும் சுமார் 16 ஆயிரம் பேரை காவு கொண்டு இருக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அப்பாவி மக்களே அதிகமாக உயிர் நீத்துள்ளனர்.

எனவே அங்கு தற்காலிக போர் நிறுத்தமாவது தேவை என உலக நாடுகள் வலியுறுத்தின. இதற்காக கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக 4 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தபடி போர் நிறுத்தத்துக்காக 50 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க ஹமாசும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேலும் உறுதி அளித்தன.

இந்த ஒப்பந்தப்படி கடந்த 24-ந் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதில் முதல் 3 நாட்களில் 39 இஸ்ரேலியர்கள் உள்பட 58 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதைப்போல நாளொன்றுக்கு 39 கைதிகள் வீதம் பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்தது.

இந்த போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகள் விடுதலை நடவடிக்கைகளை இரு தரப்பும் மும்முரமாக மேற்கொண்டன. முதல்கட்டமாக இந்த கைதிகளின் பெயர் பட்டியலை இரு தரப்பும் பரிமாறிக்கொண்டன. இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இவ்வாறு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதேநேரம் இந்த போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க சர்வதேச மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் பலனாக மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டு உள்ளன. இதை கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.

ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் (கைதிகள் மற்றும் பணய கைதிகள் விடுதலை) படி இந்த போர் நிறுத்தம் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக ஹமாசும் உறுதி செய்தது. முன்னதாக மேலும் விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணய கைதிகளுக்கும் ஒரு நாள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் கூறியிருந்தது. அதேநேரம் ஹமாசின் ராணுவ திறனை முற்றிலும் ஒழிப்பதில் தீவிரமாக இருப்பதாகவும் உறுதிபட தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் காசாவில் ஹமாசால் விடுவிக்கப்பட்ட பின்னர் 11 பணயக்கைதிகள் இஸ்ரேலிய பகுதிக்கு செல்வதை செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இதனை கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நான்காவது நாளில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தினார். இதன்படி 33 பாலஸ்தீனிய 'பொதுமக்களுக்கு' ஈடாக 11 இஸ்ரேலிய 'கைதிகள்' விடுவிக்கப்பட்டனர்.


Next Story