14 போர் விமானங்கள், 6 கப்பல்கள்... தைவானை சுற்றி சீனா அத்துமீறல்


14 போர் விமானங்கள், 6 கப்பல்கள்... தைவானை சுற்றி சீனா அத்துமீறல்
x
தினத்தந்தி 11 April 2024 10:29 AM GMT (Updated: 11 April 2024 11:41 AM GMT)

நடப்பு ஏப்ரலில், இதுவரை சீனாவின் ராணுவ விமானங்களை 71 முறையும் மற்றும் கடற்படை கப்பல்களை 63 முறையும் தைவான் கண்டறிந்து உள்ளது.

தைப்பே,

சீனாவை ஒட்டியுள்ள தைவான் சுயாட்சி தன்மையுடன் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாக தைவானை சீனா பார்க்கிறது. தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுகரம் நீட்டி வருகிறது. இதனால், ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அவ்வப்போது, சீனாவை சேர்ந்த ராணுவ விமானங்கள், கடற்படை கப்பல்கள் தைவானின் வான்பரப்பை சுற்றி வந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. இதனை கண்டறிந்து தைவானும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவின் 14 போர் விமானங்கள், 6 கடற்படை கப்பல்கள், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில், தைவானை சுற்றி சுற்றி வந்துள்ளன என தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அவற்றில், 2 விமானங்கள் தைவானின் ஜலசந்தி மத்திய கோட்டு பகுதியில் பறந்தன. 4 விமானங்கள் அந்நாட்டின் வான் பாதுகாப்பு கண்டறியும் மண்டல பகுதிக்குட்பட்ட தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு மூலை பகுதிகளில் பறந்தன.

சீனாவின் இந்த நடவடிக்கையால், அவர்களுடைய ராணுவ நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், விமானம், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களை தைவான் குவித்தது.

நடப்பு ஏப்ரலில், இதுவரை சீனாவின் ராணுவ விமானங்களை 71 முறையும் மற்றும் கடற்படை கப்பல்களை 63 முறையும் தைவான் கண்டறிந்து உள்ளது என தைவான் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த மார்ச் மாதத்தில், தைவானை சுற்றி சீனாவின் 359 ராணுவ விமானங்கள் மற்றும் 204 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டன என தைவான் நியூஸ் தெரிவிக்கின்றது. தைவானின் வான் மற்றும் கடல் பகுதிகளை சுற்றி இயங்கி வரும் கடற்படை கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தைவானுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனினும், இதற்கு தைவான் பதிலடியும் கொடுத்து வருகிறது.


Next Story