அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு


அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2020 8:04 AM GMT (Updated: 15 Nov 2020 8:04 AM GMT)

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக நவம்பர் 3 அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிச் செல்கிறது. கடந்த 13-ம் தேதி மட்டும் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு புதியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தேர்தலில் பைடன் வெற்றிப்பெற்றிருக்கும் நிலையில் புதிய ஊரடங்கை அமல்படுத்த விரும்பாத டிரம்ப், ஏப்ரல் 2021-க்குள் அனைவருக்கும் மருந்து கிடைத்துவிடும் என கூறியிருக்கிறார்.
 
இதற்கிடையே வரும் நாட்களில் பாதிப்பு அதிகமாகலாம் என மாகாண அரசுக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கட்டாயப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story