எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் எங்கள் விண்வெளி நிலையத்தை மோத வந்தது - சீனா


எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் எங்கள் விண்வெளி நிலையத்தை மோத வந்தது - சீனா
x
தினத்தந்தி 28 Dec 2021 1:37 PM GMT (Updated: 28 Dec 2021 1:37 PM GMT)

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயற்கைக்கோள்கள் எங்கள் விண்வெளி நிலையத்தை மோத நெருங்கியது என சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்,

வான்வெளியில் புவி சுற்றுவட்ட பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தை அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்து வருகின்றன.

இதற்கிடையில், சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலைய பணிக்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் விண்வெளி நிலையம் மீது எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் இரு முறை மோத நெருங்கியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. 

உலகின் பிரபல பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளார். இணையதள சேவை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக செலுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

அந்த செயற்கைக்கோள்களில் சில கடந்த ஜூலை 1 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் தங்கள் நாட்டு விண்வெளி நிலையத்திற்கு மிக அருகே மோதுவது போல் வந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. 

செயற்கைக்கோள்கள் மோதுவது போல் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன விண்வெளி நிலையம் தடுப்பு மோதல் தவிர்ப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றியது என சீனா தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் சீனா புகாரும் அளித்துள்ளது.  

Next Story