சீனாவில் கட்டுமான பணியின்போது பயங்கர நிலச்சரிவு: 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!


சீனாவில் கட்டுமான பணியின்போது பயங்கர நிலச்சரிவு: 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 4 Jan 2022 10:09 PM GMT (Updated: 2022-01-05T03:39:54+05:30)

சீனாவில் கட்டுமான பணியின்போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீஜிங்,

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்சோவ் மாகாணத்தின் பீஜி நகரில் ஆஸ்பத்திரி ஒன்று கட்டப்பட்டு வந்தது.

இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 30,000 சதுர மீட்டர் அளவிலான நிலமும், 5,000 சதுர மீட்டர் பாறைகளும் சரிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கினர்

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் 17 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சக கட்டுமான தொழிலாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர். மேலும் அவர்கள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விடியவிடிய மீட்பு பணி

அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் என சுமார் 1,000 பேர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும் பெரிய, பெரிய பாறைகள் சரிந்து கிடந்ததால் இடிபாடுகளை அகற்றுவது மீட்பு குழுவுக்கு சவாலாக இருந்தது. இதன் காரணமாக விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன.

14 பேர் பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் இடிபாடுகளுள் சிக்கிய 17 தொழிலாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் 14 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


Next Story