பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்; ஐ.நா. சபையில் இந்தியா குற்றச்சாட்டு


ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹார்
x
ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹார்
தினத்தந்தி 15 Feb 2022 4:42 PM GMT (Updated: 15 Feb 2022 4:42 PM GMT)

மும்பை, பதன்கோட், புல்வாமா தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஆதரவுடன் சுதந்திரமாக நடமாடி வருவதாக ஐ.நா. சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

அரசின் உபசரிப்பு

ஐ.நா. சபையில் பயங்கரவாத தடுப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹார் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காஷ்மீரில் புல்வாமாவில் கொடூர தாக்குதல் நடந்தது. 2008-ம் ஆண்டு மும்பையிலும், 2016-ம் ஆண்டு பதன்கோட்டிலும், 2019-ம் ஆண்டு புல்வாமாவிலும் கொடூரமான தாக்குதல்களை உலகம் கண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எங்கிருந்து (பாகிஸ்தான்) வந்தனர் என்று நமக்கு தெரியும். மேற்கண்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், இதில் ஈடுபட்டவர்கள், நிதி உதவி செய்தவர்கள் அந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். அரசின் ஆதரவு மற்றும் உபசரிப்புடன் இருக்கிறார்கள்.

தியாகிகள் முத்திரை

பயங்கரவாதத்தின் மையமாக திகழும் அந்நாடு, ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளது. பயங்கரவாதிகளை ‘தியாகிகள்’ என்று முத்திரை குத்துகிறது.

எங்கள் மண்ணில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பு நிறுத்த இந்தியா முழுமையாக உறுதி பூண்டுள்ளது. அந்த பயங்கரவாதிகள் மீது உறுதியான, நம்பகமான நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாட்டை சர்வதேச நாடுகள் வற்புறுத்த வேண்டும்.

அப்பாவிகள் மீது தாக்குதல்

அங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. அவர்களின் வகுப்புவாத கொள்கை, பயங்கரவாத கட்டமைப்பு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா.வால் பயங்கரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்ட அமைப்புகள், அப்பாவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், பல ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய கூட்டு போரில் முன்னணியில் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டிரோன் மூலம் ஆயுத கடத்தல்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:-

தலீபான், அல்கொய்தா மற்றும் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு பெரும் கவலைக்குரியது. இந்த இயக்கங்களுக்கு ஆப்கானிஸ்தான், பாதுகாப்பான புகலிடமாக மாறக்கூடும் என்பதும் அச்சமாக உள்ளது.

பயங்கரவாத செயல்களுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. டிரோன்கள் மூலம் ஆயுதம், போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இதை உலக நாடுகள் முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story