சவுதி அரேபியா விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் - 16 பேர் காயம்

விமான நிலையத்தில் புகுந்த டிரோனை இடைமறித்து அழித்த போது ஏற்பட்ட வெடிப்பில் 16 பேர் காயம் அடைந்தனர்.
ரியாத்,
ஏமன் நாட்டில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளது. இப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலையம், எண்ணை நிறுவனத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்(ஆளில்லா விமானம்) மூலம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிசான் நகரில் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
விமான நிலையத்தில் புகுந்த டிரோனை இடைமறித்து அழித்த போது ஏற்பட்ட வெடிப்பில் 16 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரோன் ஏமன் தலைநகர் சனா விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டதாக சவுதி அரேபியா பாதுகாப்பு படை குற்றம்சாட்டி உள்ளது.
Related Tags :
Next Story